திருகோணமலை பகுதியில் காரில் சென்ற தம்பதியினரை மூன்று பேர் மிரட்டி அவர்களின் கார், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு அருகில் நேற்று (16) பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது, திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை அங்கு காரில் பிரவேசித்த மூன்று பேர் மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்பு இது தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து நடாத்தப்பட்ட விசாரணையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று மாலை கிண்ணியா பாலத்திற்கு அருகில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 34 மற்றும் 35 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட கார், கொள்ளையர்கள் வந்த கார் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரை கைது செய்யும் பொருட்டு திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
