வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர்களிடையே தொடரும் முறுகல்நிலை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று (17) முறுகல்நிலை தொடர்ந்து வருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ளது. எனினும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர் நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில் புரிந்துவருகின்றார்.

இதனால் ஏனைய மீனவர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருகின்றது.

வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை முதலாளி கேவில் கடற்பரப்பு வரை சென்று வருவதால் ஏனைய மீனவர்கள் தொழில் புரிவதற்கு மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அந்த கரைவலை முதலாளியின் செயற்பாட்டால் அவரது கரைவலையில் சிக்குண்ட சிறு தொழிலாளி ஒருவரின் படகு, இயந்திரம் ஆகியன சேதமடைந்துள்ளது.

குறித்த கரைவலை முதலாளி ஏனைய பகுதிகளில் சட்டவிரோதமாக தொழில் புரிந்து வந்தமையால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டதன் பின்னரே வெற்றிலைக்கேணி விநாயகர்புரம் பகுதியில் தற்பொழுது தொழில் புரிந்து வருகின்றார்.

அதிகாலை 6 மணிக்கு பிறகே கரைவலை தொழில் புரிவதற்கு சட்டம் உள்ள போதும் இவர்கள் சட்டத்திற்கு முரனாக நேர காலத்தை மீறி ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக கடற்தொழில் சமாசத்திற்கும், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்க தவறுவதால் முறுகல் நிலை வன்முறையாக மாறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply