சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது பிரச்சினை தொடர்பில், நிதியமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், இந்தப் வேலைநிறுத்தம் நியாயமற்றது என இணை சுகாதார நிபுணர்களின் கூட்டு அதிகார சபையின் இணை அழைப்பாளர் சலித் அமரதிவாகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை தபால் தொழிற்சங்கங்கள் நேற்று ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்றும் தொடரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தம் காரணமாக தபால் நிலையங்களில் 10 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் குவிந்துள்ளதாக அதன் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வேலைநிறுத்தம் வெற்றியளிக்கவில்லை என இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
