நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வௌியிடும் கருத்துக்களை ஓடியோ, வீடியோ வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சார்ட் பதிவுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
அதன்படி, நாளை (20) முதல் மே 8ஆம் திகதி வரை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்து பதிவுகள் ஔிபரப்பப்படமாட்டாது.
இந்தக் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடத்தையின் அடிப்படையில், இந்தத் தற்காலிக இடைநீக்கம் நீக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் மேலும் பரிசீலிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
