மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளாகி களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திர கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் இன்று (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தனது மனைவி, 3 பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாய் மற்றும் சகோதரனுடன் யாழ்ப்பாணம் நயினாதீவிற்கு சுற்றுப்பணம் மேற்கொண்டு விட்டு வேனில் வீடு நோக்கிப் பயணித்து கொண்டிருந்த போது, குருநாகல் மீரிகம பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது, களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழந்தார். உடன் சென்றிருந்த அவரது மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் மனைவியின் தாய், சகோதரன் ஆகியோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பேராசிரியரின் 3 பிள்ளைகளும், மனைவியின் தாயும் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் மனைவியின் சகோதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களனி பல்கலைக்கழக பேராசிரியரின் மனைவியும் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
