தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்றைய தினம் (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்து, நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று (25) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

அதன்படி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தியினரால், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய தீர்மானத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையில் அவருக்கு எதிராக 27 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த பிரேரணையை, பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கு அமைவான உப நிரலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

இவ்வாறு கலந்துரையாடப்படும் இந்த பிரேரணை 5 நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்ற விவாதத்திற்குப் பிறகு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையின் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த பிரேரணை 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விசாரிக்க சபாநாயகர் ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பார்.

விசாரணைக் குழுவின் முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை குறித்து முடிவு எடுக்கப்படும்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply