கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற மூவர் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (26) சரணடைந்துள்ளனர்.
தற்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்குக் கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது.
இதன்போது, களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும், களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலின் போது யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யோஷித ராஜபக்ஷ நேற்று (25) கொம்பனி தெரு பொலிஸாரிடம் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
