நாட்டில் தற்போது நிலவும் வெப்பநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு அவரச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் பொதுமக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என்று வானிலை ஆய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு, வடமத்திய வடமேற்கு சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு கடும் உடலுழைப்பு சார் வேலைகளை குறைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
