களுத்துறை, ராஜாவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் நடாத்திய பெற்றோல் குண்டு தாக்குதலில் ஆறு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (29) இரவு நடாத்தப்பட்டுள்ளது.
வீட்டின் மீது நடாத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் ஆறு வயது குழந்தையும், 28 வயது பெண்ணொருவரும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் கவலைக்கிடமான நிலையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று (30) பிற்பகல் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், காயமடைந்த பெண் குழந்தையைப் பராமரித்து வந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும் தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான காரணம் வெளியாகத நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
