15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட ஐந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் 17 முதல் 19 வயதுக்குட்பட்ட இருவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோருடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த மாணவி, டியூஷன் வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.
இதன்போது காதலனான பாடசாலை மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.
கைது நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
