
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும், கொழும்பிலுள்ள பிரதான மூன்று ஹோட்டல்களையும் இலக்கு வைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.
அத்துடன் தெமட்டகொட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் விடுதியில் சிறு வெடிப்பு சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் போது வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 270இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, காலை 8:30 மணியளவில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது.
காலை 8:45 மணியளவில் அனைத்து மத ஸ்தலங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
மேலும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தினால், பாப்பரசர் பிரான்சிஸிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் ஏப்ரல் 21 தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிப்பதற்கு வத்திக்கான் தீர்மானித்துள்ளது.
இதற்கான அங்கீகாரம் தொடர்பான பிரகடனம் இன்று மாலை 5:30 க்கு கட்டுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் அறிவிக்கப்படும் என பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.