
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாமல் விபரீத முடிவை எடுத்து உயிர் மாய்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கடந்த 27ஆம் திகதி அன்று நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பின்னர், அவர் 28ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்கு சரித் தில்ஷான் திரும்பியுள்ளார்.
பின்னர் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை, தனது வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குறித்த மாணவன் பகிடி வதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானம் காரணமாகவே தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அத்துடன் கடந்த இரண்டு வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த மாணவனின் மரணம் பகிடிவதையால் ஏற்பட்ட மரணம் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவன் உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார் எனவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள், குறித்த மாணவனின் ஆடைகளை களைந்து பகிடிவதை மேற்கொண்டமையினால் மன விரக்தி காரணமாக, மாணவன் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.