வடக்கில் தமிழ் கட்சிகள் ஆதிக்கம்- தமிழர் தேசம் தமிழ் கட்சிகளுக்கே மீண்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை தனதாக்கியுள்ள போதும், அவற்றில் ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களை தவிர, ஏனைய அனைத்திலும் பெரும்பான்மையை அக்கட்சி இழந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான சபைகளை கைப்பற்றி முன்னிலைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

சமீபத்திய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது நாமல் ராஜபகச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனவும், திலித் ஜெயவீரவின் சர்வஜன பலயாவும் முன்னேற்றம் கண்டுள்ளன.

வடக்கில் தமிழ் கட்சிகள் தமக்கான ஆசனங்களை தக்கவைத்துள்ளன.

தற்போது வரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. மாறாக தமிழர் தேசம் தமிழ் கட்சிகளுக்கே மீண்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.

கடந்த பொது தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மகாணத்தில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு பெருகிய ஆதரவு கிடைத்திருந்தது.

கடந்த காலங்களில் வடக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பெருகிய ஆதரவு உள்ளூராட்சி சபை தேர்தலிலும் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஆளும் கட்சிக்கு இருந்தது.

எனினும், முடிவுகள் அதற்கு மாறாக அமைந்துள்ளன. வெளியாகியுள்ள முடிவுகளின்படி, வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக பல்வேறு இடங்களை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளடங்கிய தமிழ் தேசியப் பேரவை கைப்பற்றியுள்ளது.

யாழ். மாநகர சபையைில் இலங்கை தமிழரசு கட்சி 13 இடங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 இடங்களையும், ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலா நான்கு இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை, பருத்திதுறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மூன்று சபைகளிலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளடங்கிய தமிழ் தேசியப் பேரவை முன்னிலைப் பெற்றுள்ளது.

சாவகச்சேரி நகர சபையில் ஆறு இடங்களையும், வல்வெட்டித்துறை நகர சபையில் ஏழு இடங்களையும், கோப்பாயில் ஒன்பது இடங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

அதேபோல், சாவகச்சேரி நகர சபையில் ஆறு இடங்களையும், கோப்பாயில் 11 இடங்களையும், வல்வெட்டித்துறையில் ஐந்து இடங்களையும் இலங்கை தமிழரசு கட்சி வென்றுள்ளது.

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசு கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. அங்குள்ள பெரும்பாலான சபைகளை தனித்து நிர்வகிக்கும் ஆற்றலை தமிழரசு கட்சி பெற்றுள்ளது.

வவுனியா மற்றும் மன்னாரில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக் தமிழ் தேசியக் கூட்டணி கணிசமான வெற்றிகளை பதிவுசெய்துள்ளது. மேலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் தமிழ் பிரதேச சபைகளை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பிலும் தமிழரசு கட்சிய வெற்றிவாகை சூடியுள்ளது. அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் தமிழரசு கட்சி பெற்றிகளை பதிவுசெய்துள்ளது.

கடந்த பொது தேர்தல் மற்றும் ஜனதிபதி தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கியிருந்த நிலையில், உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply