
டேன் பிரியசாத் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி ஹர்ஷண கெகுணவெலவின் உத்தரவின்படி இந்த அடையாள அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது, மூன்று சாட்சிகள் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிடுகையில், இந்த விசாரணை தவறான பாதையில் செல்வதாகக் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் இந்தச் சம்பவத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாதவர்கள் என்றும், உண்மையான துப்பாக்கிதாரிகள் வெளியில் சுதந்திரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அடையாள அணிவகுப்புக்கு அழைக்கப்பட்ட சாட்சிகளில் இருவர் இரண்டாவது சந்தேக நபரின் உறவினர்கள் என்று குறிப்பிட்ட சட்டத்தரணி, சந்தேக நபரை நன்கு அறிந்த உறவினர்கள் இருவர் அவரை அடையாளம் காண அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும் வாதிட்டார்.
எனினும், விசாரணைகளை மேற்கொள்ளும் மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரி, நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் மற்றும் CCTV காட்சிகளின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களின் மூலம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.