யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அதனை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (12) யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாகவும், வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கிலும் இந்த உப்பில்லாத முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் காய்ச்சி வழங்கப்பட்டது.

அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கும் செயற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.

மேலும் எதிர்வரும் புதன்கிழமை 14ஆம் திகதி யாழ். பல்கலையில் இரத்ததான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதுடன், முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அனுபவித்த துயரங்களை எடுத்துக்காட்டும் முகமாக பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் கண்காட்சி ஒன்றினையும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply