
அம்பாறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி பயிலும் ஒன்பது மாணவர்களை முழங்காலில் நிற்க வைத்து, பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
பாடசாலையில் கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றுள்ளது.
இதன் போது அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறியடித்து விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மறுநாள் 16 ஆம் திகதி அன்று 3.00 மணியளவில், பாடசாலை அதிபர் மூன்று பிரம்புகளை எடுத்து, ஒன்பது மாணவர்களையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து, அவர்களின் கைகளைச் சுவரில் வைக்கச் செய்து, மாணவர்களின் முதுகில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய காயங்களும் இருப்பது கண்டறியப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யத் தயாராக இருந்தபோது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர் குழு, தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் இன்றையதினம் சிறுவர் மறுவாழ்வு மையம், அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் இந்த பிள்ளைகள் மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
அதேவேளை, அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் இத்தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் எனத் தெரிவித்தார்.