இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும்.
நாட்டின் குடியரசு தினம் மே 22இல் கொண்டாடப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டாலும் அப்போது பிரித்தானியரிடம் இருந்து பூரண சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை.
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அங்கிகரிக்கப்படும் வரை, எமது நாட்டின் அரச தலைவர் பிரித்தானிய அரச தலைவராகும், பிரித்தானிய ராணுவ தளபதியே எமது நாட்டின் ராணுவ தளபதியாகும், அதேபோன்று நீதிமன்ற தீர்ப்பின் இறுதி முடிவு பிரித்தானிய நீதிமன்றமே மேற்கொள்ளும்.
1815 ஆம் ஆண்டு, கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய பேரரசுடன் இணைக்கப்பட்டது, அன்றிலிருந்து நாட்டின் மீதான இறையாண்மை பிரித்தானிய பேரரசிடம் மாற்றப்பட்டது.
பிரித்தானிய மன்னரால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் நாடு ஆளப்பட்டது.
இந்நிலையில், 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியே இலங்கை சோல்பரி யாப்பு முறையில் இருந்து விடுபட்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கியது.
1972ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியில் இருந்த ஶ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்தில் இருந்து நீக்கி சுதந்திர குடியரசாக மே மாதம் 22ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.
1972ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு பின்னரே அரச தலைவர், ராணுவ தளபதி, நீதிமன்ற சுதந்திரம் என இவை அனைத்தும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றன.
அதன்படி பிரித்தானிய காலனியாக இருந்த இலங்கை நாடு முழு சுதந்திரம் பெற்ற நாள் குடியரசு தினம் என்பதோடு, இது நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
