வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி மாணவி விவகாரம்- விசாரணைகள் ஆரம்பம்!

வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் கடந்த வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

கண்டி தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த சஞ்சீவனி குமாரி என்ற மாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டியின் தெல்தெனிய பகுதியிலிருந்து வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரிக்கு கல்வி பயில வந்த சஞ்சீவனி, தனது கல்வி காலத்தை நிறைவு செய்வதற்குள் அவர் இவ்வாறு தற்கொலை முடிவை நோக்கிச் சென்றுள்ளார்.

குறித்த மாணவி யாருக்கும் தெரியாத வகையில் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி ஆசிரியர்களால் அவள் அனுபவித்த துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்க முடியாமல் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய நண்பிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது போன்ற மரணங்கள் இனியும் இடம்பெறுவதை தடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவர்கள் நேற்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பீடத்தின் பீடாதிபதி வர வேண்டும் என்று கோரி, இரவு வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை நடந்திருக்கலாம் என்று மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என வயம்ப தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி லால் குமார தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply