டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரானது, யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 52 வயதான சத்தியானந்த பிரபாகர குருக்கள் என்பவர் ஆவார்.
இவர் இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காரில் பயணம் செய்துள்ள நிலையில் சத்தியானந்த பிரபாகர குருக்கள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன், அவரின் மனைவி பி.சீத்தாலட்சுமி (வயது – 50), மகன் பி.அக்ஸய் (வயது 27), மாமனார் சுவாமிநாதன் ஐயர் (வயது – 70) படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
