அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய சம்பவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் இன்று (26) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்பாட்டமானது திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இடன்பெற்றது.
திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (24) நடைபெற்றது.
இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பில் அறிவிப்பதற்காக சம்பவதினமான சனிக்கிழமை (23) மாலை அன்று குறித்த ஆசிரியர், மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது வீட்டில் சத்தம் கேட்ட நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த மாணவியின் சகோதரன் ஆசிரியரை வாளால் வெட்டி தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்துள்ளார்.
இதனையடுத்து அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்ததையடுத்து அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்டபோது, மாணவியின் சகோதரன் அதிபர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் குறித்த அதிபர், ஆசிரியர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று(26) காலை திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது,
யார் தருவார் ஆசிரியர்களுக்கு உத்தரவாதம்,
ஆசிரியர் மீது அன்பு காட்டு,
வஞ்சனை தவிர்த்து வழி காட்டியை மதிக்கலாம்,
கல்விச் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடாதீர்கள், பாதுகாப்பு வேண்டும் ஆசிரியர் அதிபர்களுக்கு,
அழிக்காதே அழிக்காதே கல்வி சமூகத்தை அழிக்காதே,
அறம்வழி நடப்போம் அதிபர் ஆசிரியர் பெருமை காப்போம்
போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு அங்கிருந்து திருக்கோலில் மணிக் கூட்டு கோபுரம் வரை ஊர்வலமாக சென்றனர்
இதனை தொடர்ந்து அங்கு சுமார் அரை மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு தமது கண்டனத்தை தெரிவித்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

