நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்றையதினம் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி பெருவிழா பட்டோலை வழங்கி வைக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெறவுள்ளன.
நல்லூர் கந்தனின் திருவிழா காலத்தில் ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை யாழ். மாநகர சபையினர் ஒழுங்குசெய்து திருவிழா சிறப்பாக நடைபெற வழிவகுத்து கொடுப்பார்கள்.
இத்தகைய பணியை செய்துவரும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (27) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி, ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டது.
இந்த வைபவத்தின் போது யாழ். மாநகர சபை வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி தோரணங்கள் கட்டி அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
