நாடு திரும்பிய சிவலோகநாதனின் கைது விவகாரம்- கண்டனம் வெளியிட்டுள்ள அரசியல் பிரமுகர்கள்!

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவரிடம் நாடு திரும்புவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் இருந்தும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு அகதி என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது நாடு திரும்புவதற்கு தயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், நாட்டிற்கு பயந்து வராமல் இருப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரான ஏம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால், திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்.பி தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், கைது செய்து, பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்?

75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.

ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? என மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply