தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய இரு தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் (02) கைச்சாத்திடப்பட்டது.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் பெற்றுக் கொண்ட ஆசனங்களை கொண்டு சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்றிரவு இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்தே இன்றையதினம் கொள்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
