முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சராகப் பணியாற்றியபோது, பதினைந்து பேரை பெயரளவில் தனது ஊழியர்களாக சேர்த்து, அவர்களுக்கு சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேர ஊதியத்தை வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
குறித்த வழக்கு விசாரணை கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
