பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘ஷான் சுத்தா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 30ஆம் திகதி வெல்லவாய நகரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, வெல்லவாய பிரதேசத்தின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான மஹவெலமுல்லே ஷான் சுத்தா என்று அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது சந்தேக நபர் பொலிஸாரை கூரிய ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்தி தாக்க முயன்ற வேளையில், பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர், இன்று (03) காலை சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
