பாணந்துறை பகுதியில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (03) மாலை இடம்பெற்றது.
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் பாணந்துறை ஹொரேத்துடுவ பாலம் அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
மொரட்டுவை, மோல்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
பாணந்துறை ஹொரேத்துடுவ பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த ஒருவரை சோதனையிட்ட வேளையில் குறித்த நபரின் சட்டைப் பையில் இருந்த வெளிநாட்டு தயாரிப்பு பேனா வடிவ துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது ஒரு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்றும், அது செயல்படும் நிலையில் உள்ளது என்றும், கொலைக்கு மிகவும் சூட்சுமமாக பயன்படுத்தக்கூடிய ஆயுதம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குய்ப்பிடத்தக்கது.
