“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் அரசியல் கட்சியினர், சிவில் சமூக அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டத்தின் போது,
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பிரதேச சபையினர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
சித்தர்கள் பலர் வாழ்ந்து சமாதியடைந்த இடமாகவும், சமாதி கோவில், ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைக்கால் சிவன் கோவில் ஆகியவை அமைந்துள்ள புண்ணிய பூமியில் கழிவுகள் கொட்டப்பட்டு சேகரிக்கப்படும் இடமாக காணப்படுவதால் குறித்த கழிவகற்றல் நிலையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் இது வரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
உரிய அனுமதிகள் பெறப்படாமல் இந்த நிலையம் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதுடன், அண்மையில் அந்த நிலையம் தீப்பற்றி எரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. இது முதல் தடவை அல்ல என்பதுடன் பல தடவைகள் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதற்குரிய மாற்று ஏற்பாடுகள் சபையில் பேசப்பட்டாலும் நடைமுறையில் எவையும் சாத்தியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
