தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த போராட்டம் இன்றும் (10) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திஸ்ஸ விகாரையில் இன்று நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் தெற்கில் இருந்து மக்கள் பேருந்துக்களில் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளை பெறப்பட்டு ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

