மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நில பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்றைய தினம் காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.

பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டக்காரர்கள்,

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து,
எங்கள் மண்ணை சுடு காடாக்காதே,
அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே,
உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு பேரணியில் பங்கேற்றனர்.

பின்னர் மன்னார் மக்கள் எதிர்நோக்கும் குறித்த இரு பிரச்சினைகள் தொடர்பான மகஜரை மன்னர் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரனிடம், மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.

இதன்போது மன்னர் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன்,

மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கு அறிவேன். மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்களாக நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply