யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டார்.
யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்றையதினம் (13) காலை யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவும் பரிந்துரைக்கப்பட்டது.
முதல்வர் தெரிவுக்காக இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பில், விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்தது.
இந்தநிலையில் விவேகானந்தராஜா மதிவதனி முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட நிலையில் யாழ் மாநகரின் ஆட்சியை தமிழரசு கட்சி தனதாக்கியது.
பிரதி முதல்வராக தமிழரசு கட்சியின் உறுப்பினர் இமானுவேல் தயாளன் தெரிவுசெய்யுப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

