“செம்மணி புதைகுழி மற்றும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட புதைகுழிகளை இலங்கைக்கு வருகைதரும் ஐ.நா. பிரதிநிதி பார்வையிட்டு நீதிப்பொறி முறைக்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ள நிலையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும் அதற்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கு எதுவித நடவடிக்கைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.
அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அம்பாறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தோம் – எனவும் குறிப்பிட்டார்.
நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரிலே எங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துவதுடன், இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா. பிரதிநிதி காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும். அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்- என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர் யோகராசா கலாறஞ்சினி வலியுறுத்தினார்.
