பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்கும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருளை பீப்பாய்கள் மற்றும் கேன்களில் பெறும் பொருட்டு நுகர்வோர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற விதத்தில் கூடி வரிசைகளை உருவாக்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை வழங்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் போதுமானளவு எரிபொருள் உள்ள போதும், நுகர்வோர் தேவையற்ற அச்சம் காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்டவரிசையில் காத்திருப்பதாகவும், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை பெறும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் தெரிவித்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், நுகர்வோரின் இவ்வாறான நடவடிக்கையினாலேயே பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
