கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தான் தெரிவு செய்யப்பட்டமையை தனிப்பட்ட வெற்றியாக எடுத்துக்கொள்ள போவதில்லை என்றும், தனது வெற்றி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும் என்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
இன்று (18) காலை கொழும்பு மேஜருக்கான பதவியேற்பு விழா இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நகரத்தையும் மாற்றுவோம்” என்று குடிமக்கள் குரல் எழுப்பியதாக குறிப்பிட்ட மேயர், இந்த நகரத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
கொழும்பு இலங்கையின் பணக்கார நகரமாக இருந்தாலும், அதன் இருண்ட பக்கம் இப்போது கொழும்பை மூழ்கடித்துள்ளதாக கூறிய அவர், நகரத்தில் வாழும் மக்களுக்கு வெளிச்சம் வழங்குவதில் தனக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒழுங்கற்ற திட்டங்கள் காரணமாக கொழும்பில் பல பெரிய பிரச்சினைகள் இருப்பதாகவும், அவை அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு நகரத்தை உலகின் மிகவும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்றும், கட்சி அல்லது நிற வேறுபாடின்றி 117 உறுப்பினர்களின் கூட்டுப் பணியிலேயே வெற்றி அடங்கியுள்ளது என்றும், இதற்கு ஆதரவளிக்குமாறும் கொழும்பு மேயர் கேட்டுக் கொண்டார்.
