ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் ஜி. சுபாஷ் சமிந்த ரோஷன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஜனாதிபதி குறித்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறிய தகவலானது அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதன்படி சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
