சீரற்ற வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகை – இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த 2023 ஒக்டோபா் முதல் இந்தியாவின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ‘சுபம்’ என்ற தனியாா் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.
சீரற்ற வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதே போல கடந்த ஜூன் 13ஆம் திகதி முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது நிலவும் சாதகமான காலநிலையினால் காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை நேற்று (18) காலை வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, சிவகங்கை கப்பல் 95 பயணிகளுடன் புறப்பட்டு காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. பின்னா், இலங்கையிலிருந்து 108 பயணிகளுடன் பிற்பகல் புறப்பட்ட கப்பல் மாலையில் நாகை துறைமுகத்துக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
