உயிரிழந்த பல்கலை மாணவன் விவகாரம்- மரணத்துக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணத்துக்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் படி குறித்த மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்டார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதையை தாங்க முடியாமல் சரித் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பின்னர், அவர் 28ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த சம்பவத்தை அடுத்து விசாரணைகளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பகிடிவதை முறைப்பாட்டு விசாரணைப் பிரிவினர் ஆரம்பித்திருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழகத்தின் சில சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகம் உட்பட பல தரப்பினரிடமிருந்து விசாரணை அதிகாரிகள் வாக்குமூலங்களையும் பதிவு செய்தனர்.

அதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட மாணவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள், பல்கலைக்கழகத்திற்குள் நடக்கும் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் வௌியே செல்லாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகிடிவதை விசாரணை பிரிவுக்கு 30இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 10 இற்கும் மேற்பட்ட பெரும்பாலானவை சப்ரகமுவவில் இருந்து கிடைத்துள்ளதாகவும் தெரியந்துள்ளது.

கிழக்கு மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகங்களிலிருந்தும் பகிடிவதை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதற்கிடையில், சமீபத்திய சம்பவங்கள் தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1997 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply