காலி மாநகர சபையின் பிரதி மேயராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியந்த கொடகம சஹபந்துவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
காலி மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து கட்சி அறிவித்திருந்தது.
எனினும் வாக்களிப்பின் போது கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயற்பட்டதாகவும், அதன் விளைவாக பிரதி மேயராக பிரியந்த கொடகம தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்புரிமையிலிருந்து அவர் இடைநிறுத்தப்படுவதாகவும், கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கான உரிமையும் இழக்கப்படுவதாகவும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
