மாத்தளை மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் சமிலா அதபத்துவின் தலைமையில் இன்று (23) மாத்தளை மாநகர சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 10 உறுப்பினர்களையம், ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 உறுப்பினரையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1 உறுப்பினரையும், சர்வஜன பலய 1 உறுப்பினரையும், ஐக்கிய தேசியக் கூட்டணி 1 உறுப்பினரையும் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மாத்தளை மாநகர சபையின் மேஜரைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பின் போது, வாக்களிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்து மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன் பிறகு, உள்ளூராட்சி சபை ஆணையாளர் வாக்கெடுப்பை நடத்தினார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி 12 வாக்குகளைப் பெற்று மாத்தளை மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதன் பிரதி மேயராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.மோகன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
உள்ளூராட்சி சட்டத்தை மீறி பதவி வகிக்க தகுதியற்ற பெண் உறுப்பினருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சபையை விட்டு வௌியேறியதாகவும், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது எனவும் சபையிலிருந்து வௌிநடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
