யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி ‘அணையா தீபம்’ ஏற்றபட்டது.
தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்றதே தவிர தீர்வுகள் எதுவும் கிடையாத போசுபொருளாகவே அது நீடித்துச்செல்கின்றது. அவ்வாறான நிலை இனியும் தொடரக் கூடாது. தமிழ் மக்கள் இழந்தவற்றையும் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை நோக்கிய வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் ‘அணையா தீபம்’ போராட்டம் யாழ் செம்மணியில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ‘அணையா தீபம்’ போராட்டமானது இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் செயல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது பார்வைக்கு குறித்த பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
