ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வியஜம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நேற்று (23) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதன்முறையாகும்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வரவேற்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.

இதன்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், செயற்திறன்மிக்க தீர்வுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக பரந்தளவிலான மனித உரிமைசார் பிரச்சினைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக மனித உரிமைகளின் மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உட்பட பல அமைச்சரவை அமைச்சர்களுடனும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்துடனும் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply