கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு நேற்றைய தினம் (23) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கொழும்பு வடக்கு குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், உயிரிழந்த சிறுமியின் தாய், மூன்று பாடசாலை மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன் விசாரணைக்குத் தேவையான பாடசாலையின் சிசிடிவி கெமராக்களின் டி.வி.ஆர் இயந்திரம், மற்றொரு விசாரணைக்காக பொது நிர்வாக அமைச்சகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதவான், உடனடியாக இயந்திரத்தைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
