யாழில் காணிகளை விடுவிக்க கோரி தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.

தமது உரிமைக் காணி தொடர்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் இன்றைய தினம் காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்று 500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அவ்விடத்தை விட்டு நகராமல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, அன்ரனிபுரம், காங்கேசன்துறை பகுதிகளை சேர்ந்தவர்களும் கத்தோலிக்க மத குருமார்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பொது அமைப்புகள் உட்பட மலையக மக்கள் சார் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன.

ஆனால் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்றுவரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகள் வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் வைத்திருப்பது மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழும் நிலைக்கு உட்படுத்துவதாகவே தாம் உணர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே தமிழ் மக்கள் மத்தியில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்ற புதிய அரசாங்கம் கவனம் செலுத்தும் வரையில் குறித்த போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply