பகிடிவதை விவகாரம்- ஒலுவில் பல்கலை 22 மாணவர்கள் இடைநீக்கம்!

பகிடிவதை சம்பவத்தில் ஈடுபட்ட ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழு ஒன்று முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுவது போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று அதிகாலை 2 மணியளவில் முதலாமாண்டு மாணவர்களின் விடுதி அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களுள் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

இதுபோன்று பல தடவைகள் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் பல்கலையின் மேலிடத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் புதிய துணைவேந்தராக பதவியேற்ற பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீனை தொடர்பு கொண்ட போதிலும் அவர் பதிலளிப்பதில் இருந்து தவிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply