இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
எந்த பிரச்சனையும் இல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை பெறுவதற்கு நாங்கள் ஏற்கனவே முன்பதிவுகள் செய்துள்ளோம். அந்த முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.
பிரச்சனை என்னவென்றால், எரிபொருள் எந்த இடங்களிலிருந்து வருகிறது என்பதுதான். அதற்கு பிறகு, போரின் தாக்கம் இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவது போர் நடக்கும் பிராந்தியத்திலிருந்து அல்ல. அந்த எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவில் இருந்து வருகிறது.
ஒரே ஒரு இறக்குமதி ஓமானிலிருந்து செய்யப்பட்டது. அதுவும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் அந்த விநியோகஸ்தர்களிடம் கலந்துரையாடி எரிபொருள் கிடைக்கப்பெறுவதை முழுமையாக உறுதி செய்துள்ளோம். இதனால் எந்த பிரச்சினையும் இல்லை- என்று தெரிவித்தார்.
மேலும் தற்போதைய நிலைமையில் சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜே. ராஜகருணா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
