யாழ். செம்மணி ‘அணையா தீபம்’ போராட்டம்- இறுதி நாள் இன்று!

யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘அணையா தீபம்’ போராட்டத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இறுதி நாளான இன்று (25) பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.

தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்றதே தவிர தீர்வுகள் எதுவும் கிடையாத பேசுபொருளாகவே அது நீடித்துச்செல்கின்றது. அவ்வாறான நிலை இனியும் தொடரக் கூடாது. தமிழ் மக்கள் இழந்தவற்றையும் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை நோக்கிய வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் ‘அணையா தீபம்’ போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 23ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மக்கள் செயல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்டது.

இரவு பகலாக நடைபெற்ற இந்த போராட்டம் மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இறுதி நாளான இன்றைய போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்தும் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். இதன் போது ஐ.நா ஆணையாளர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று போராட்டத்தின் மகஜரொன்றும் ஆணையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஆணையாளர் நேரடியாக வருகிறாரா இல்லையா என்பது தொடர்பாக உறுதியாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply