புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் இலங்கையில் வழங்கப்பட்டுவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்றையதினம் (29) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டு தோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த முதல் 250 மாணவர்களுக்கு பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிக்கு ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கமும், இரண்டாம் இடத்தைப் பெற்ற யா. மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிவிழி சுதாஜி என்பவருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
மூன்றாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வின்சற் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த டிலுக்சினி டன்ஸ்ரன், மன்னார் சேவியர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த றித்திக்கா அன்ரன் பிலிப்ஸ், யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிமொழி கணேசானந்தன் ஆகிய மூவருக்கும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுவரும் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான விருதை இம்முறை பாக்கியநாதன் சசிக்குமார், பாக்கியநாதன் ராஜ்குமார் ஆகிய இருவரும் பெற்றிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் இலங்கையில் வழங்கப்பட்டுவரும் சூழல்சார் விருதுகளில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த முன்னிலை விருதுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
