விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது என்ற விடயம் தொடர்பில் முழுமையான தகவலை தன்னால் வழங்க முடியும் என்றும், எனினும் அவ்வாறு வழங்கினால் பொய்யாக என்மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
இன்றைய (30) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது, அவைகள் எங்கிருந்து வந்தது, எந்த நாட்டிலிருந்து வந்தது? என்பது தொடர்பான முழுமையான தகவல்களை தன்னால் வழங்க முடியும்.
ஆனால் அதை வழங்கிய பின்னர் போதைப்பொருள் வழக்கில் பொய்யாக என்மீது வழக்கு பதிவு செய்து எனது எம்.பி பதவியை பறிக்கப் போவதில்லை என்று நிரூபிக்கச் சொல்லுங்கள். நான் அதை பாராளுமன்றத்தில் முன்வைப்பேன். இல்லையெனில், நான் வேறு நாட்டிற்கு ஓடிப்போய் அதை அம்பலப்படுத்த வேண்டியிருக்கும்.
அந்த 320 கொள்கலன்களுக்குள் என்ன இருந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல பயப்படவில்லை. முழு விபரங்களையும் நான் உங்களுக்குச் சொல்ல முடியும். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கு இறப்பதற்கு பயமில்லை. இவர்கள் என்னை தேவையற்ற வழக்குகளில் அவ்வப்போது சிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது இவர்களிடம் பொலிஸ் அதிகாரம் உள்ளது. தற்போது இவர்கள் எம்.பி பதவியை பறித்து, உண்மை வெளிவருவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
