தென்மராட்சி பகுதியில் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம்!

தென்மராட்சி பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சி, சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீளவும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென இயங்கு நிலைக்கு செயற்படுத்தப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த உப்பளத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரோடு உப்பளத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

இதன்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆழ்துளை குழாய் கிணறுகள் மூலம் உப்பு உற்பத்தி பாத்திகளுக்கு நீர் இறைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்தோடு உப்பளம் அமைப்பதற்கு சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அறுகுவெளி கடல் நீரேரியில் இருந்தே உப்பு உற்பத்திக்கான நீர் எடுக்க வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் சட்டவிரோத குழாய்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய அதிகாரிகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உப நகரபிதா ஞா.கிஷோர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply