இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவை ஜூலை 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், தான் இணைந்த ஒரு தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபா மதிப்புள்ள உபகரணங்களை நோயாளிகளுக்கு 175,000 ரூபாவுக்கு விற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இது குறித்த வழக்கு இன்றையதினம் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை மீளவும் விளக்கமறியலில் வைத்ததுடன், வழக்கில் தொடர்புடைய ஏனைய இரண்டு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கியது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு, சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
