விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பதுங்கு குழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதி 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில், போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று முல்லைத்தீவு நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது.

இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர் குறித்த காணியில் கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். போரின் குண்டுத் தாக்குதல்களால் பதுங்கு குழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில் அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை. இந்த நிலக்கீழ் பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலக்கீழ் பதுங்குகுழியில், விடுதலைப்புலிகளின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சிலர் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் புதுக்குடியிருப்புப் பொலிஸார் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

அதன்படி குறித்த பதுங்கு குழியை அகழ்வு செய்வதற்கு முன்பாக நேற்றையதினம் (09) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் அங்கு கள ஆய்வில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து இன்று காலை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு பணித்திருந்தார்.

நேற்றையதினம் குறித்த நிலக்கீழ் பதுங்கு குழியை கிராம சேவையாளர், விஷேட அதிரடி படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார், உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

நீதவானின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் , கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகள் இணைந்து குறித்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகளை முன்னெடுத்ததுடன், பதுங்கு குழியினுள் இருக்கும் நீரினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இன்றையதினம் (10) நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply